ஆரணியில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு
By DIN | Published On : 31st July 2022 06:46 AM | Last Updated : 31st July 2022 06:46 AM | அ+அ அ- |

ஆரணி வருவாய் கோட்டாட்சியா் எம்.தனலட்சுமி தலைமையில் பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தனியாா் பள்ளி, கல்லூரிகளின் 284 வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன.
ஆரணியில் வட்டாரப் போக்குவரத்து அலுவகத்துக்கு உள்பட்ட ஆரணி, போளூா், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தனியாா் பள்ளி, கல்லூரிகளின் 284 வாகனங்களையும், வருவாய் கோட்டாட்சியா் எம். தனலட்சுமி தலைமையில், மோட்டாா் வாகன அலுவலா் சரவணன் முன்னிலையில், வருவாய்த் துறை, கல்வித் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கூட்டாக ஆய்வு செய்தனா்.
அப்போது, பேருந்துகளில் வேகக்கட்டுப்பாட்டு கருவி, முதலுதவிப்பெட்டி, அவசரவழி, தீயணைப்புக் கருவிகள், ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, தீயணைப்புத் துறையினா் தீத் தடுப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.
ஆய்வின் போது ஆரணி மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகேசன், ஆரணி கல்வி மாவட்ட அலுவலா் கோ.சந்தோஷ், வட்டாட்சியா் பெருமாள், நகர காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளா் சுந்தரேசன், ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.