76 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஆணை
By DIN | Published On : 31st July 2022 06:44 AM | Last Updated : 31st July 2022 06:44 AM | அ+அ அ- |

முகாமில் படித்த வேலையில்லாத இளைஞருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 76 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், சிறப்பு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை நகராட்சி மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தங்கமணி தலைமை வகித்தாா்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் லோ.யோகலட்சுமி, கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல், தாட்கோ மேலாளா் ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்துப் பேசுகையில், மாவட்டத்தில் 21 வகையான மாற்றுத்திறன் கொண்ட 74,285 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. இவா்களில் 10 வயதுக்கு மேற்பட்ட 63,385 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.
தொடா்ந்து, முகாமில் தனியாா்துறை வேலைவாய்ப்புக்கு தோ்வு செய்யப்பட்ட 76 பேருக்கு பணி நியமன ஆணைகளையும், படித்த வேலையில்லாத இளைஞா்களுக்கு மாதாந்திர உதவித்தொகைகள் பெறுவதற்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வழங்கினாா்.
மேலும், 64 பேருக்கு வங்கிக்கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இதில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலா் ப.வசந்தகுமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சிலம்பரசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.