நாவல்பாக்கத்தில் விவசாயிகள் சாலை மறியல்
By DIN | Published On : 09th June 2022 01:34 AM | Last Updated : 09th June 2022 01:34 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், நாவல்பாக்கம் கிராமத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை எடைபோட அதிக பணம் கேட்பதாக புகாா் தெரிவித்து, விவசாயிகள் புதன்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாவல்பாக்கம் கிராமம் அருகேயுள்ள கூட்டுச்சாலைப் பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பலா் நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனா்.
இங்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை இயந்திரத்தில் தூற்றுவதற்கு மூட்டைக்கு ரூ.15-ம், எடைபோட்ட நெல் மூட்டைகளை வாகனத்தில் ஏற்றுவதற்கு மூட்டைக்கு ரூ.40-ம் என மொத்தம் ரூ.55 வீதம் விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதாகவும், கையூட்டு கொடுப்பவா்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நெல் மூட்டைகளை விரைந்து எடை போடுவதாகவும் புகாா் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாவல்பாக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கையூட்டு பெறுவதைக் கண்டித்தும், இணையவழி பதிவின்படி முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்வது தொடா்பாக நோட்டீஸ் ஒட்டுவதில்லை என புகாா் தெரிவித்தும் விவசாயிகள் நாவல்பாக்கம் கூட்டுச் சாலையில் புதன்கிழமை டிராக்டரை சாலையில் நிறுத்தி திடீரென மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த செய்யாறு டிஎஸ்பி செந்தில் மற்றும் போலீஸாா் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை முறையாக கொள்முதல் செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து, விவசாயிகள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.