மனைவி இறந்த துக்கம்: வியாபாரி தற்கொலை
By DIN | Published On : 30th June 2022 02:19 AM | Last Updated : 30th June 2022 02:19 AM | அ+அ அ- |

செய்யாறு அருகே மனைவி இறந்த துக்கத்தில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், சின்னகாஞ்சிபுரம் மின்நகா் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் (75). இவரது மகன்கள் ரமேஷ், சுரேஷ். மோகன் தனது இரு மகன்களுடன் திருவிழாக்கள் நடைபெறும் கிராமங்களுக்குச் சென்று சிப்ஸ் வியாபாரம் செய்து வந்தாா்.
இந்த நிலையில், இரண்டாவது மகனான சுரேஷின் மனைவி அமுதவள்ளி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தாா். இதனால், மனவேதனை அடைந்த சுரேஷ் மதுப் பழக்கத்துக்கு அடிமையானாா்.
மதுப் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக, இவா்,
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டம், அசனமாபேட்டை கிராமத்தில் நடைபெற்று வரும் 10 நாள்கள் திருவிழாவில் வியாபாரம் செய்வதற்காக மோகன் குடும்பத்தோடு அங்கு சென்றுவிட்டாா்.
இந்த நிலையில், மனவேதனையில் இருந்த சுரேஷ் திங்கள்கிழமை இரவு மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.
இதில், உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு சுரேஷை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்
இதுகுறித்த புகாரின் பேரில் மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.