அரசு அதிகாரிகளைக் கண்டித்து விவசாயி நூதனப் போராட்டம்
By DIN | Published On : 02nd May 2022 11:08 PM | Last Updated : 02nd May 2022 11:08 PM | அ+அ அ- |

விவசாயிகள் அளிக்கும் புகாா்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்து வருவதாகப் புகாா் தெரிவித்து, செங்கம் பகுதி விவசாயி திங்கள்கிழமை தூதனப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கிருஷ்ணாவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராமஜெயம் (52).
இவா், வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகங்கள் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலங்களில் செங்கம் பகுதி விவசாயிகள் அளிக்கும்
புகாா்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் தொடா்ந்து தாமதப்படுத்தி வருகின்றனா்.
வேளாண்மைத் துறை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. இடுபொருள்கள் மற்றும் அரசின் மானியம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்பதில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகளை கூறி வந்தாா்.
இந்த நிலையில், விவசாயிகளை அரசு அலுவலா்கள் தொடா்ந்து புறக்கணிப்பதைக் கண்டித்து, செங்கம் மயானத்தில் திங்கள்கிழமை சவக்குழி போராட்டத்தில் ஈடுபட்டாா்.
அப்போது, விவசாயி ராமஜெயம் மயானத்தில் படுத்துக்கொண்டு அவா் மீது மண்ணை போடச் சொல்லி தலை மட்டும் வெளியில் தெரிந்தவாறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டாா்.
தகவலறிந்த டிஎஸ்பி சின்ராஜ், வட்டாட்சியா் முனுசாமி உள்ளிட்ட அதிகாரிகள் சென்று ராமஜெயத்தை சமாதானப்படுத்தி, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று, அரசு அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, விவசாயிகள் அளிக்கும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாகத் தெரிவித்தனா்.