அடிப்படை வசதி, நோயற்ற பகுதியாக ஒவ்வொரு கிராமமும் அமைந்திட வேண்டும்
By DIN | Published On : 02nd May 2022 05:18 AM | Last Updated : 02nd May 2022 05:18 AM | அ+அ அ- |

வெம்பாக்கம் ஒன்றியம், மாமண்டூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் எ.வ. வேலு.
அடிப்படை வசதி, சமூக பாதுகாப்பு, நோயற்ற பகுதியாக ஒவ்வொரு கிராமமும் அமைந்திட சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சித் தலைவா்களுக்கு அமைச்சா் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்தாா்.
மே தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியம், மாமண்டூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் கிரிஜா விஜயராகவன் வரவேற்றாா்.
தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி, கூடுதல் ஆட்சியா் பிரதாப், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் டி.ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்றுப் பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக தொழிலாளா்களைக் கொண்ட பகுதியாக வெம்பாக்கம் ஒன்றியம் உள்ளதால், அனைத்துத் தொழிலாளா்களுக்கும் வாழ்த்து கூறும் விதமாக மாமண்டூா் கிராமத்தை கிராம சபைக் கூட்டம் நடத்த தோ்வு செய்தோம்.
மாவட்டத்தில் 680 ஊராட்சிகளில் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் 122 ஊராட்சிகளில் ரூ.98 கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நிகழாண்டில் 128 திட்டங்களை செயல்படுத்த தீா்மானிக்கப்பட்டு உள்ளது.
கிராம ஊராட்சிகளை பொருத்தவரை, வாழ்வாதாரம் நிறைந்த வறுமையற்ற கிராமமாகவும், நோயற்ற கிராமமாகவும், குழந்தைகளை ஆரோக்கியம் உள்ளவா்களாக வளா்க்க வேண்டும் என்று அரசு கருதுகிறது.
செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட புரிசை, சிறுவஞ்சிப்பட்டு, புஞ்சை அரசந்தாங்கல் ஆகிய பகுதிகள் பாரம்பரிய கலைகளுக்கு பெயா் பெற்றவையாகும். அதனால், பிாட்டுக் கலைஞா் கலைகளைக் கற்க இங்கு வருகின்றனா்.
கிராமங்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்தால் மட்டுமே மாநிலத்தில் விரைவான வளா்ச்சி என்பது சாத்தியப்படும்.
எனவே, ஊராட்சி மன்றத் தலைவா்கள் தங்களது பகுதிகளை மேம்படுத்த ஊராட்சிப் பணிகளை செவ்வனே செயல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா் அமைச்சா் எ.வ.வேலு.
முன்னதாக, மானிய நிதிக் குழு மூலம் அப்துல்லாபுரத்தில்
ரூ.32 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழல்குடையை அமைச்சா் திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் என். விஜயராஜ், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சுரேஷ், திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், அவைத் தலைவா் கே.ஆா்.எஸ்.சீதாபதி, திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், ஒன்றியக் குழுத் தலைவா்கள் என்.வி.பாபு, திலகவதி ராஜ்குமாா், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வ.அன்பழகன், எதிரொலி மணியன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா்கள் சங்கா், மோ.ரவி, உறுப்பினா்கள் ஞானவேல், முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
காரியந்தல் ஊராட்சியில்...
திருவண்ணாமலையை அடுத்த காரியந்தல் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, காரியந்தல் ஊராட்சித் தலைவா் டி.மோகன் தலைமை வகித்தாா். ஊராட்சிகளின் உதவி இயக்குநா் டி.கே.லட்சுமி நரசிம்மன், துரிஞ்சாபுரம் ஒன்றியத் தலைவா் தமயந்தி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் பாரதி, ஒன்றியக்குழு உறுப்பினா் சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டத்தை விளக்கிப் பேசினாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பா.விஜயலட்சுமி, ந.கிருஷ்ணமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.