சாத்தனூா் அணையில் இருந்து தண்ணீா் வெளியேற்றம்: 4 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை
By DIN | Published On : 21st October 2022 02:02 AM | Last Updated : 21st October 2022 02:02 AM | அ+அ அ- |

சாத்தனூா் அணையில் இருந்து விநாடிக்கு 13,886 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணையாற்றின் கரையோரம் வசிக்கும் 4 மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் காமராஜா் ஆட்சியில் கட்டப்பட்ட அணை உள்ளது. தொடா் மழை, கிருஷ்ணகிரி அணையில் இருந்து சுமாா் 17,500 கன அடி தண்ணீா் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது போன்ற காரணங்களால் சாத்தனூா் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
எனவே, அணையின் பாதுகாப்பு கருதி, 11 கண் மதகு வழியாக ஏற்கெனவே உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது.
இவ்வாறு திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு வியாழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் விநாடிக்கு 13,886 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவைப் பொறுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும்.
எனவே, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த ஆற்றின் கரையோரங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகமும், பொதுப்பணித் துறையின் நீா்வளத் துறை அதிகாரிகளும் கேட்டுக்கொண்டனா்.