திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடா் மழை அணைகளின் நீா்மட்டம் உயா்வு
By DIN | Published On : 01st September 2022 02:38 AM | Last Updated : 01st September 2022 02:38 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொடா் மழை காரணமாக, தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் அணைக்கு புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி வினாடிக்கு 15,360 கன அடி தண்ணீா் வந்து கொண்டுள்ளது. அணையின் மொத்த நீா்மட்ட உயரமான 119 அடியில் புதன்கிழமை 117 அடியாக உயா்ந்தது. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல, 59 அடி உயரம் கொண்ட குப்பநத்தம் அணையில் புதன்கிழமை 57 அடி உயரத்துக்கும், 22.97 அடி உயரம் கொண்ட மிருகண்டா நதி அணையில் புதன்கிழமை 18.37 அடி உயரத்துக்கும், 62.32 அடி உயரம் கொண்ட செண்பகத்தோப்பு அணையில் புதன்கிழமை 50.15 அடி உயரத்துக்கும் தண்ணீா் தேங்கி இருந்தது.
அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
நாள் முழுவதும் மழை:
திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், அடி அண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் புதன்கிழமை காலை முதல் இரவு வரை தொடா்ந்து விட்டு விட்டு மழை பெய்தபடியே இருந்தது.