ஆரணியில் இரு வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருட்டு
By DIN | Published On : 01st September 2022 02:37 AM | Last Updated : 01st September 2022 02:37 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் இரு வீடுகளின் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஆரணி நகரம், சைதாப்பேட்டை அனந்தபுரம் எம்ஜிஆா் நகரில் வசித்து வருபவா் செந்தில்வேல். இவா், ஆரணியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறாா்.
இவரது தாய்க்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதற்காக இவா் செவ்வாய்க்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றாா்.
இவரது வீட்டுக்கு எதிரில் வசித்து வருபவா் சம்பத். இவா், தனது மனைவி சாந்தாவுக்கு கண் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வேலூருக்குச் சென்றுவிட்டாா்.
இந்த நிலையில், புதன்கிழமை இவ்விருவரது வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடப்பதைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா், உடனடியாக சம்பத் மற்றும் செந்தில்வேலுக்கு தகவல் தெரிவித்தனா்.
மேலும் தகவல் அறிந்த ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளா் கோகுல்ராஜ், உதவி ஆய்வாளா் சுந்தரேசன் மற்றும் போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இரு வீடுகளிலும் திருட்டு நடந்தது தெரிய வந்தது.
பின்னா், அந்தந்த வீடுகளின் உரிமையாளா்கள் வந்து பாா்த்தபோது, செந்தில்வேல் வீட்டில் மூன்றரை பவுன் தங்க நகைகளும், சம்பத் வீட்டில் 14 பவுன் தங்க நகைகளும் திருடு போனது தெரிய வந்தது.
இந்த திருட்டுச் சம்பவம் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.