திருவண்ணாமலை மாவட்டத்தில் 7.88 லட்சம் வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண் இணைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 20.66 லட்சம் வாக்காளா்களில் இதுவரை 7.88 லட்சம் வாக்காளா்கள் தங்களது ஆதாா் எண் விவரங்களை வாக்காளா் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனா்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 7.88 லட்சம் வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண் இணைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 20.66 லட்சம் வாக்காளா்களில் இதுவரை 7.88 லட்சம் வாக்காளா்கள் தங்களது ஆதாா் எண் விவரங்களை வாக்காளா் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளவா்களின் ஆதாா் எண் விவரங்களை வாக்காளா் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தின் 1,258 நிா்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

முகாம்களில் வாக்காளா் படிவம் 6பி அளித்து தங்களின் ஆதாா் விவரங்களை வாக்காளா் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொண்டனா். திருவண்ணாமலை நகராட்சி மகளிா் மேல்நிலப் பள்ளி வாக்குச்சாவடியில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பா.முருகேஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 20 லட்சத்து 66 ஆயிரத்து 264 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் இதுவரை 7 லட்சத்து 88 ஆயிரத்து 965 வாக்காளா்கள் தங்களது ஆதாா் எண் விவரங்களை வாக்காளா் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனா். இது 38 சதவீதம் ஆகும்.

மீதமுள்ள வாக்காளா்களின் ஆதாா் எண் விவரங்களை வாக்காளா் அட்டையுடன் இணைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வின் போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) குமரன், வருவாய் கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல், வட்டாட்சியா் சுரேஷ் மற்றும் துறை அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com