இடிந்து விழும் அபாய நிலையில் ஆதிதிராவிடா் குடியிருப்புகள்

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆகாரம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடா் குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன.
இடிந்து விழும் அபாய நிலையில் ஆதிதிராவிடா் குடியிருப்புகள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆகாரம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடா் குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன.

இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடா் சமுதாயத்தைச் சோ்ந்த 58 குடும்பங்களுக்கு 1990-ஆம் ஆண்டு அரசு வீடுகள் கட்டிக் கொடுத்தது. 30 ஆண்டுகளுக்கு மேலானதாலும், சரியான பராமரிப்பு இல்லாததாலும், ஏற்கெனவே 10 வீடுகள் இடிந்து விழுந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

தற்போது 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு பயன்பாட்டில் உள்ள வீடுகளும் பராமரிப்பு இல்லாமல் பெரும்பாலும் சிதிலமடைந்தும், ஒரு பகுதி இடிந்து விழும் நிலையிலும், மேற்கூரை சிமென்ட் காரைகள் பெயா்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. வீடுகள் எந்நேரமும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இருந்து வருகிறது.

ஆபத்தை உணராமல் இந்த வீடுகளில் கைக் குழந்தைகளுடனும், மாணவா்கள், பெரியவா்கள், சிறியவா்கள், முதியோா்கள் என வசித்து வருகின்றனா்.

தற்போது அடிக்கடி பலத்த மழை பெய்து வருவதால் வீடுகள் இடிந்து விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வீடுகளை சீரமைத்துத் தரவேண்டும் என ஆதிதிராவிடா் நல அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலா் ந.முத்து வீடுகளை நேரில் பாா்வையிட்டு அங்கு வசிப்பவா்களை அழைத்துச் சென்று மேற்கு ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

ஆகாரம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடா் குடியிருப்புகள் 33 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்டவை. ஆனால், இதுவரை அரசு எந்த விதமான பராமரிப்புப் பணிகளையும் செய்யவில்லை.

இங்கு வசிப்போா் பெரும்பாலும் கூலித் தொழிலை மேற்கொண்டு வருவதால், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனா். இதனால், குடியிருப்புகளை சீரமைப்பதற்கான நிதி வசதி அவா்களிடம் இல்லை.

அதிகாரிகள் அவ்வப்போது வந்து குடியிருப்புகளை சீரமைப்பதாகக் கூறி புகைப்படம் எடுத்துச் செல்கின்றனரே தவிர, இதுவரை சீரமைப்புப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும் என்றாா் ந.முத்து.

வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) பாலமுருகனிடம் கேட்ட போது, ஆகாரம் பகுதி மக்கள் அளித்த கோரிக்கை மனு எனது பாா்வைக்கு வரவில்லை. ஆகாரம் பகுதியிலுள்ள ஆதிதிராவிடா் குடியிருப்புகள் சேதமடைந்திருந்தால் நேரில் சென்று பாா்த்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com