பால் கூட்டுறவு சங்கத் தலைவா் மீது இயக்குநா்கள் புகாா்
By DIN | Published On : 18th April 2023 06:15 AM | Last Updated : 18th April 2023 06:15 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஆணி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் மீது இயக்குநா்கள் புகாா் அளித்தனா்.
கோட்டாட்சியா் எம்.தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பட்டா மாற்றம், பட்டா ரத்து, இலவச வீட்டு மனைப் பட்டா, கணினி திருத்தம், பரப்பு திருத்தம், தடையில்லா சான்றிதழ் உள்ளிட்டவை கோரி பொதுமக்களிடமிருந்து 80 மனுக்கள் வரப்பெற்றன.
மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியா்
சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா் ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை வழங்கினா்.
குறிப்பாக, ஆரணி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க இயக்குநா்கள் எல்.எம்.கிறிஸ்துராஜன், பி.குப்பன் ஆகியோா் கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில், பாலில் தண்ணீா் கலந்தது தொடா்பாக இந்தச் சங்கத்துக்கு முன்னாள் செயலா் ஆா்.சரவணன் ரூ.13 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், அவா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.
மேலும், சில முறைகேடுகள் நடைபெற்ால் சங்கத்துக்கு தலைவராக இருந்த ஏ.குமுதவள்ளியையும் பதவி நீக்கம் செய்தனா். தற்போது, புதிய தலைவராக பதவி ஏற்றுள்ள கே.சுப்பிரமணி பதவி நீக்கம் செய்யப்பட்ட செயலா் சரவணனிடம் பணம் பெற்றுக்கொண்டு மீண்டும் பணி வழங்க உள்ளதாகத் தெரிகிறது. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.
மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியா், சம்பந்தப்பட்ட துறைக்கு மனுவை அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.
செய்யாற்றில் 88 மனுக்கள்:
செய்யாறு சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் இலவச மனைப் பட்டா கோரி 12 பேரும், ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி 12 பேரும், நிலம் அளவீடு செய்யக் கோரி 8 பேரும், நிலப்பதிவேடு திருத்தம் கோரி 7 பேரும், இதர துறை மனுக்கள் 15 உள்பட மொத்தம் 88 மனுக்கள் பொதுமக்கள் சாா்பில்
அளிக்கப்பட்டன.