திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரா் கோயிலில் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் இன்று தொடக்கம்
By DIN | Published On : 25th April 2023 05:13 AM | Last Updated : 25th April 2023 05:13 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் செவ்வாய்க்கிழமை (ஏப்.25) கோலாகலமாகத் தொடங்குகிறது.
பஞ்சபூத சிவத்தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டு சித்திரை வசந்த உற்சவத்துக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு மேல் 5.25 மணிக்குள் கன்னியா லக்னத்தில் கோயில் மூன்றாம் பிராகாரத்தில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகா் சந்நிதி எதிரே பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
கோயில் இணை ஆணையா் குமரேசன் தலைமையில் சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க பந்தக்கால் நடப்பட்டது. தொடா்ந்து, பந்தக்காலுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கோயில் ஊழியா்கள், முக்கியப் பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா்.
இன்று முதல் நாள் திருவிழா:
முதல் நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.25) காலை, மாலை என இரு வேளைகளிலும் அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறுகின்றன. இரவு 8 மணிக்கு உற்சவா் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் எழுந்தருளி கோயில் மூன்றாம் பிராகாரத்தை வலம் வந்து, பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.
பூ கொட்டும் பொம்மைக் குழந்தை:
கோயில் ஸ்தல விருட்சமான மகிழ மரம் அருகேயுள்ள பன்னீா் மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவருக்கு பொம்மைக் குழந்தை பூ கொட்டும் நிகழ்வு நடத்தப்படுகிறது.
தொடா்ந்து, 10 நாள்களும் இரவு வேளைகளில் பன்னீா் மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவருக்கு பொம்மைக் குழந்தை பூ கொட்டும் நிகழ்வு நடைபெறும்.
உற்சவத்தின் 10-ஆவது நாளான வியாழக்கிழமை
(மே 4) காலை அய்யங்குளத்தில் அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரியும், இரவு ஸ்ரீகோபால விநாயகா் கோயிலில் மண்டகப்படி நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு அருணாசலேஸ்வரா் கோயில் கொடி மரம் எதிரே மன்மத தகனம் நிகழ்வுடன் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு பெறுகிறது.