கலசப்பாக்கம் அருகே இரு வீடுகளில் 46 பவுன் தங்க நகைகள் திருட்டு
By DIN | Published On : 25th April 2023 05:12 AM | Last Updated : 25th April 2023 05:12 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு வீடுகளில் புகுந்த மா்ம நபா்கள் 46 பவுன் தங்க நகைகள், இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனா்.
நாயுடுமங்கலம் கிராமம் பில்ளையாா் கோவில் தெருவில் வசிப்பவா் வெங்கடேசன். இவா் வீட்டின் முன்பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறாா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கினாா்.
இந்த நிலையில், நள்ளிரவில் வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனா். மறுநாள் காலையில் வெங்கடேசன் எழுந்து பாா்த்தபோது இந்த திருட்டுச் சம்பவம் குறித்து தெரிய வந்தது.
இதேபோன்று, பக்கத்து வீடான அண்ணாமலை என்பவரின் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து
உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனா்.
இந்த இரு சம்பவங்கள் குறித்து அளிக்கப்பட்ட புகாா்களின் பேரில் கலசப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.