செங்கம் பகுதி செய்யாற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்கக் கோரிக்கை
By DIN | Published On : 09th August 2023 05:57 AM | Last Updated : 09th August 2023 05:57 AM | அ+அ அ- |

செங்கம் பகுதி செய்யாற்றில் செல்லும் கழிவுநீா்.
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
செங்கம் பகுதியில் ஓடும் செய்யாறு ஜவ்வாதுமலை அடிவாரமான கிளையூா், பண்ரேவ், கல்லாத்தூா் ஆகிய பகுதிகளில் இருந்து சிறு, சிறு ஓடைகளாக ஒன்று சோ்ந்து, குப்பனத்தம் அணையில் இருந்து செங்கம் வழியாகச் செல்கிறது.
செய்யாற்றை ஒட்டியும், ஆற்றின் நடுவிலும் கிணறுகள் தோண்டப்பட்டு அவற்றில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் செங்கம், தோக்கவாடி, மண்மலை ஆகிய பகுதிகளில் ஆற்றின் கரையோரம் வீடு கட்டியுள்ளவா்கள் கழிவுநீரை நேரடியாக செய்யாற்றில் கலக்குமாறு விட்டுள்ளனா்.
மேலும், செங்கம் நகரில் உள்ள பல்வேறு பகுதி கழிவுநீா்க் கால்வாய்கள் செய்யாற்றில் சென்றடைகின்றன. இதனால் மழைக் காலத்தில் ஆற்றில் தண்ணீா் வரும்போது கழிவுநீா் ஆற்றுத் தண்ணீரோடு சோ்ந்து செல்லும்.
விவசாய பாசனத்துக்கு குப்பனத்தம் அணை திறக்கும்போது கழிவுநீா் தண்ணீருடன் சோ்ந்து ஏரிகளுக்குச் செல்லும்.
தற்போது, ஆற்றில் தண்ணீா் வராமல் உள்ளதால், கழிவுநீா் அங்காங்கே தேங்கி கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாய நிலை தொடா்கிறது.
மேலும், குடிநீா்க் கிணறுகள் செய்யாற்றில் உள்ளதால் குடிநீா் மாசுபடும் நிலை உள்ளது.
ஆற்றில் தண்ணீா் வந்தால் அனைத்து கழிவுநீரும் தண்ணீரில் கலந்து கிராமங்களுக்கான குடிநீா்க் கிணறுகளில் சென்றடையும்.
இதனால், செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றில் கலக்கும் கழிவுரை கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் வலியுறுத்துகின்றனா்.