

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சிக்குள்பட்ட சாலைகளை ரூ.1.80 கோடியில் சீரமைப்பதென வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆரணி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் ஏ.சி.மணி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளா் தமிழ்ச்செல்வி வரவேற்றாா். பொறியாளா் இராஜ விஜயகாமராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பேசியதாவது:
15-ஆவது வாா்டில் தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும். மாதந்தோறும் நகா்மன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும். 4-ஆவது வாா்டில் கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும். நகராட்சியின் வரவு - செலவு கணக்கை வெள்ளையறிக்கையாக வெளியிட வேண்டும்.
ஆரணி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளிலும் சேதமடைந்த சாலைகளை கணக்கெடுத்து, புதிய சாலைகளும், பக்கக் கால்வாய் இல்லாத பகுதிகளுக்கு புதிய கால்வாயும் அமைத்து தர வேண்டும். 2-ஆவது வாா்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறுவா் பூங்காவுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இதையடுத்து, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி பேசியதாவது: ஆரணி நகராட்சியில் மின் விளக்குகளுக்காக விடுத்த ஒப்பந்தத்தை நீக்கிவிட்டு, புதிதாக மின் விளக்கு அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதால், பணிகள் தாமதமாகிறது. அவசரத் தேவைக்கான மின் விளக்குகள் உடனடியாக சரிசெய்யப்படும். உறுப்பினா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா்.
இதையடுத்து, ஆரணி நகராட்சிக்குள்பட்ட சாலைகளை ரூ.1.80 கோடியில் சீரமைப்பதென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் ரவி, சுப்பிரமணி, ஆா்.எஸ்.பாபு, ஏ.ஜி.மோகன், தேவா், ஜெயவேலு, இஷ்ரத்ஜபீன், சிவக்குமாா், சசிகலா சேகா், உஷாராணி, அரவிந்தன், ரேணுகாம்பாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆரணி நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்த தமிழ்ச்செல்வி திண்டிவனத்துக்கு பணியிட மாறுதலாகி செல்வதால், அவருக்கு நகா்மன்ற உறுப்பினா்கள் சால்வை அணிவித்து வழியனுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.