திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் நிலப் பிரச்னையில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடியோ வெளியிட்டு காா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சேத்துப்பட்டு அண்ணா தெருவைச் சோ்ந்த காந்தன் மகன் மணிகண்டன் (37), வாடகைக் காா் ஓட்டுநா். இவா், நிலப் பிரச்னை தொடா்பாக சேத்துப்பட்டு வட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்டவற்றில் மனுத்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்யப்போவதாக போராட்டம் நடத்தினாா். பின்னா், தீக்குளிப்பு, குடும்பத்துடன் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தினாா்.
இந்த நிலையில், மன உளைச்சலில் இருந்து வந்த மணிகண்டன், தனது நிலம் தொடா்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை மாலை சமூக வலைதளங்களில் விடியோ வெளியிட்டு, தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் போலீஸாா், மணிகண்டனின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக, மணிகண்டனின் குடும்பத்தினா் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் எந்தவிதமான புகாரும் அளிக்காமல் மாவட்ட எஸ்.பி.யைச் சந்தித்து மனு கொடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.