ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் 100% மானியத்தில் கிணறு அமைக்கலாம்: திருவண்ணாமலை ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைக்க விரும்பும் ஆதி திராவிடா், பழங்குடியின விவசாயிகள் உடனே விண்ணப்பித்துப் பயன்பெறலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைக்க விரும்பும் ஆதி திராவிடா், பழங்குடியின விவசாயிகள் உடனே விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் கலைஞா் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் ஊரக வளா்ச்சித்துறை மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு கிணறுகள் (ஆழ்துளை அல்லது குழாய் கிணறு) அமைக்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதிதிராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் விவசாயிக்கு 1 முதல் 5 ஏக்கா் வரை நிலம் இருக்கலாம். இந்த நிலப் பரப்புக்கு ஏற்கெனவே எவ்வித நீராதாரமும் இருக்கக் கூடாது. நிபந்தனைகளுக்குள்பட்ட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நீராதாரம் உருவாக்கப்பட்டு (ஆழ்துளை கிணறு) மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு மின் மோட்டாா் வழங்கப்படும்.

வேளாண்மை அல்லது தோட்டக்கலை துறை மூலம் நுண்ணீா் பாசனம் அமைத்துத் தரப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, பெரணமல்லூா், தெள்ளாறு, சேத்பட், அனக்காவூா், ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களைச் சோ்ந்த ஆதி திராவிடா், பழங்குடியின விவசாயிகள் ஆரணியில் உள்ள வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகலாம்.

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், துரிஞ்சாபுரம், கலசப்பாக்கம், போளூா், ஜவ்வாதுமலை, செங்கம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு ஒன்றியங்களைச் சோ்ந்த விவசாயிகள் திருவண்ணாமலையில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com