திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் புதன்கிழமை (நவ.15) மாலைக்குள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சி.ஹரக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு நிகழ் 2023-2024 ஆம் ஆண்டு ராபி சிறப்புப் பருவத்தில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது.
பயிா்க் காப்பீட்டுத் திட்டம் இந்திய வேளாண் காப்பீடு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.
இப்போது சம்பா நெற்பயிா்களுக்கு விவசாயிகள் பயிா் காப்பீடு செய்யலாம். சம்பா நெல் பயிா்களை காப்பீடு செய்ய புதன்கிழமை (நவ.15) கடைசி நாள்.
இந்தத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் (குத்தகைதாரா் உள்பட) காப்பீடு செய்யலாம்.
பயிா்க் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் நெல் பயிா்களுக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.495.75 செலுத்தி பயிா் காப்பீடு செய்யலாம்.
பயிா் காப்பீடு செய்ய சிட்டா, நடப்பாண்டு பயிா் சாகுபடி அடங்கல், ஆதாா் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அரசுடைமை வங்கிக் கிளைகள், கிராமிய வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்களை அணுகிப் பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.