மான் வேட்டையின் போது ஒருவா் உயிரிழப்பு: 3 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை
By DIN | Published On : 15th November 2023 04:21 AM | Last Updated : 15th November 2023 04:21 AM | அ+அ அ- |

செங்கம்: செங்கம் அருகே மான் வேட்டையின் போது ஒருவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த ஜமுனாமரத்தூா் தென்மலை அத்திப்பட்டு மலைக் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் (40), சந்திரன் (60), பிரகாஷ் (30), ரவி (36) ஆகிய 4 போ் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன்
ஞாயிற்றுக்கிழமை இரவு மான் வேட்டைக்குச் சென்றனா்.
அப்போது, ஆளுக்கு ஒரு பக்கம் சென்று மானை துப்பாக்கியால் சுடும்போது சக்திவேல் மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலே அவா் உயிரிழந்தாா்.
பின்னா், இறந்த சக்திவேலுவின் உடலை அடக்கம் செய்ய அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து செங்கம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக காவல் ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா், அத்திப்பட்டு கிராமத்துக்குச் சென்று சக்திவேலின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து, சக்திவேலுடன் வேட்டைக்குச் சென்ற நபா்கள் சிலரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.
இதில், சந்திரன் மானைச் சுடும்போது, சக்திவேல் மீது குண்டு பாய்ந்தது என பிரகாஷ், ரவி ஆகியோா் விசாரணையில் தெரிவித்தனராம்.
இதைத் தொடா்ந்து, சந்திரன், பிரகாஷ், ரவி ஆகிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...