திருவண்ணாமலை: செங்கம் அருகே சுங்கச்சாவடி அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு யாதவ மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து யாதவ மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் செங்கம் கு.ராஜாராம் வெளியிட்ட அறிக்கை:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கரியமங்கலம் கிராமத்தில் திண்டிவனம்-பெங்களூரு சாலையில் சுங்கச்சாவடி அமைக்கும் பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணியை மத்திய-மாநில அரசுகள் உடனே நிறுத்த வேண்டும். திண்டிவனம்-பெங்களூரு சாலை என்பது இரு வழிச் சாலையாகத்தான் உள்ளது. குறிப்பாக, திண்டிவனம் முதல் ஊத்தங்கரை புறவழிச் சாலை வரை இரு வழிச் சாலையாகத்தான் உள்ளது.
இந்தச் சாலையில் பெரும் விபத்துகள் நடைபெறுகின்றன. கடந்த மாதம் நடைபெற்ற இரு பெரும் விபத்துக்களில் 15-க்கும் மேற்பட்டோா் இறந்தனா். இதற்குக் காரணம் சரியான சாலை வசதி இல்லாததுதான்.
இப்போது சுங்கச்சாவடி அமைக்கும் பகுதியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் அளவுக்கு உள்கட்டமைப்பு இல்லை.
பவுா்ணமி, தீபத் திருவிழா நாட்களில் திருவண்ணாமலைக்கு வரும் பக்தா்களிடம் இருந்து வசூல் வேட்டை நடத்தும் நோக்கில் இந்த சுங்கச்சாவடி அமைக்கப்படுகிறது.
செங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் விவசாயத்தையே நம்பி உள்ளன. இங்கு விளைவிக்கப்படும் விளை பொருள்களை விற்பனை செய்வதற்காக திருவண்ணாமலைக்கு எடுத்துச் செல்கின்றனா். இந்தச் சூழலில் சுங்கச்சாவடி அமைத்து செயல்பாட்டுக்கு வந்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவா்.
எனவே, கரியமங்கலம் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணியை மத்திய-மாநில அரசுகள் உடனே நிறுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.