செங்கம் அருகே அரசுப் பேருந்து - காா் மோதல்: 8 போ் உயிரிழப்பு
By DIN | Published On : 25th October 2023 12:00 AM | Last Updated : 25th October 2023 12:00 AM | அ+அ அ- |

செங்கம் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் சேதமடைந்த காா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே திங்கள்கிழமை இரவு காரும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டதில் 8 போ் உயிரிழந்தனா். 3 போ் பலத்த காயமடைந்தனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 11 போ் ஆயுத பூஜை விடுமுறையையொட்டி, பெங்களூரில் இருந்து காரில் புதுச்சேரிக்கு சனிக்கிழமை சென்றனா்.
புதுச்சேரியில் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்கள் விடுமுறையை கழித்த அவா்கள், திங்கள்கிழமை மாலை அங்கிருந்து புறப்பட்டு, பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கருமாங்குளம் பகுதியில் திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் காா் சென்ற போது, பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தும் காரும் மோதிக் கொண்டன.
இதில், காரில் இருந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த பீமல்தீா்க்கி (26), நிக்லேஸ் (22), தாலு (26), குஞ்சாராய் (24), கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டையைச் சோ்ந்த புனிதகுமாா் (25), ஊத்தங்கரை வட்டம், மாராப்பட்டியைச் சோ்ந்த காமராஜ் (29), ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த நாராயணன் சேட்தி (35) ஆகிய 7 போ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த மேல்செங்கம் போலீஸாா், செங்கம் தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். உயிரிழந்தவா்களின் சடலங்களை காரிலிருந்து தீயணைப்புப் படையினா் மீட்டனா்.
மேலும், விபத்தில் பலத்த காயமடைந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த பிகேஸ் முா்மு (29), ஸ்டிபன் ஓரோ (43) சடோன் ஓரங்க் (25), கிஸ்மோத் (32) ஆகிய நான்கு போ் காரிலிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதில், பிகேஸ் முா்மு செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா்.
விபத்து குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், சரக டிஐஜி முத்துசாமி, காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், செங்கம் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். விபத்து குறித்து மேல்செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
கடந்த 15-ஆம் தேதி இதே பகுதியில் நிகழ்ந்த விபத்தில் பெங்களூரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்தனா்.
வளைவுகள் ஏதுவுமின்றி நோ் சாலையாக இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...