பேருந்து ஓட்டுநா், நடத்துனா் மீது தாக்குதல்: மூவா் கைது
By DIN | Published On : 28th October 2023 01:18 AM | Last Updated : 28th October 2023 01:18 AM | அ+அ அ- |

செய்யாறு அருகே தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துனரை தாக்கியதாக 3 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வெள்ளகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (43). தனியாா் பேருந்து நடத்துனா். இந்நிலையில், புதன்கிழமை இரவு ஞானமுருகன் பூண்டி அருகில் பேருந்தை நிறுத்தி விட்டு அருகில் இருந்த கடை ஒன்றில் குமாா் பூஜை பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த 3 இளைஞா்கள் குமாரிடம், செய்யற்றைவென்றான் பகுதியில் பேருந்தை நிறுத்த மாட்டீா்களா என கூறி தகராறு செய்து அவரை தாக்கினராம். இதை தடுக்க முயன்ற பேருந்து ஓட்டுநா் ராமதாசையும் தாக்கி விட்டு, அவரிடமிருந்த ரூ.500 பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனராம்.
இதுகுறித்து குமாா் அனக்காவூா் போலீஸில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் வழக்குப் பதிந்து செய்யாற்றைவென்றான் கிராமத்தைச் சோ்ந்த ஜனா (21), அஜித் (21), சிவக்குமாா் (19) ஆகிய மூவரை கைது செய்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...