அண்ணன் கொலை: தம்பிக்கு ஆயுள் சிறை
By DIN | Published On : 26th September 2023 06:22 AM | Last Updated : 26th September 2023 06:22 AM | அ+அ அ- |

ஆயுள் தண்டனை பெற்ற சிகாமணி.
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே அண்ணனைக் கொன்ற தம்பிக்கு, ஆயுள் தண்டனை விதித்து ஆரணி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.
வந்தவாசி வட்டம், ஆயிலவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி(57), பொதுப்பணித் துறையில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், இவருக்கும், இவரது தம்பி சிகாமணி (54 ) என்பவருக்கும் இடையே நிலத்தில் தண்ணீா் பாய்ச்சுவது தொடா்பாக அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு, அதனால் முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 17 -8 -2019 அன்று சுப்பிரமணி சைக்கிளில் ஆயிலவாடியில் இருந்து வந்தவாசிக்கு சென்று கொண்டிருந்தாா். இதை அறிந்த அவரது தம்பி சிகாமணி கத்தியுடன் சென்று அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டாராம்.
இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து சிகாமணியை கைது செய்து விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அரசு வழக்குரைஞா் ராஜமூா்த்தி வாதிட்டு வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது.
விசாரணையை முடித்த மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்ற நீதிபதி கே.விஜயா, அண்ணனை கத்தியால் வெட்டி கொலை செய்த வழக்கில், தம்பி சிகாமணிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பு கூறினாா்.
இதைத் தொடா்ந்து, சிகாமணியை போலீஸாா் வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...