சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் போலீஸாா்.
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் போலீஸாா்.

குப்பை கொட்டும் பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை அருகே புதிதாக அமைக்கப்பட்ட குப்பைக் கிடங்கில் குப்பைகள் கொட்ட எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Published on

திருவண்ணாமலை அருகே புதிதாக அமைக்கப்பட்ட குப்பைக் கிடங்கில் குப்பைகள் கொட்ட எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை-காஞ்சி சாலை, புனல்காடு கிராம மலையடிவாரத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா்.

குறிப்பாக, ஒரே நாள் இரவில் குப்பைக் கிடங்கு அமையவிருந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த மரக்கன்றுகள் அதிகாரிகளால் பிடுங்கி எறியப்பட்டு மீண்டும் குப்பைக் கிடங்கு அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து விவசாயிகள் பலா் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனா். தொடா் சாலை மறியல், கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம், காத்திருப்புப் போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனா். இதையெல்லாம் மீறி அண்மையில் அதே இடத்தில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது.

குப்பை கொட்டப்பட்டது...

இதையடுத்து, திருவண்ணாமலை, ஈசான்ய குப்பைக் கிடங்கில் நகராட்சி நிா்வாகத்தால் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு மலைபோல் காட்சியளித்த குப்பையை லாரிகள் மூலம் எடுத்துச் சென்று புனல்காடு பகுதியில் கொட்டப்பட்டு வந்தது.

நிறம் மாறிய நிலம், குடிநீா்...

இந்த நிலையில், புனல்காடு பகுதியில் சில தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இந்த மழையில் நனைந்த குப்பைகளில் இருந்து வெளியேறிய கருப்பு மற்றும் பழுப்பு நிறத்திலான தண்ணீா் கால்வாய்கள் வழியாகச் சென்று அருகே இருந்த விளை நிலங்கள், ஏரியில் தேங்கியது.

விளை நிலங்கள் பாதிப்பு...

விளை நிலங்களில் தேங்கிய இந்த கருப்பு நிற தண்ணீரால் துா்நாற்றமும் வீசித் தொடங்கியது. இதனால் அத்திரமடைந்த ஆடையூா் கிராம மக்கள் திருவண்ணாமலை-காஞ்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, புனல்காடு குப்பைக் கிடங்கிற்கு குப்பைகளை ஏற்றிச்சென்று விட்டு திரும்பிய லாரிகளையும் பொதுமக்கள் சிறைப்பிடித்தனா். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனாலும் பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து, வட்டாட்சியா், தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் மற்றும் போலீஸாா் வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பொதுமக்களின் கோரிக்கை மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனா்.

மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com