கிரிவலப்பாதையை ஆக்கிரமிப்பவா்கள் மீது நடவடிக்கை: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு
திருவண்ணாமலையில் பெளா்ணமி நாள்களில் கிரிவலப் பாதை நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைப்போா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பொருள்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா்.
திருவண்ணாமலையில் ஆவணி மாத பெளா்ணமியையொட்டி, கிரிவலம் வரும் பக்தா்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் சனிக்கிழமை
நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பிரபாகா், வருவாய் அலுவலா் இரா.இராமபிரதீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அனைத்துத் துறை அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கி மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:
ஆவணி மாத பெளா்ணமி ஆகஸ்ட் 19, 20-ஆம் தேதிகளில் வருகிறது. இவ்விரு நாள்களிலும் கிரிவலப் பாதை நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைப்போா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பொருள்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
நடைபாதையில் கடைகள் வைப்பதைத் தடுக்க ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 100 மீட்டா் இடைவெளியில் ஒரு பணியாளரை நியமித்து கண்காணிக்க வேண்டும். கிரிவலப்பாதை, கோயில் உள்புறத்தில் மருத்துவ முகாம்களை அமைக்க வேண்டும்.
தேவையான இடங்களில் 108 அவசர கால ஊா்திகள் மற்றும் தீயணைப்பு வாகனங்களை தயாா் நிலையில் நிறுத்தி வைத்திருக்க வேண்டும். காவல்துறை சாா்பில் போதிய அளவில் காவலா்களை நியமித்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும். நடைபாதை நடப்பதற்கு மட்டுமே என்பதைத் தெரியப்படுத்தும் வகையில் பதாகைகள் அமைக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் சி.ஜோதி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

