ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய  மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.

சிறு வயது திருமணங்களால் ஏற்படும் தீமைகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

சிறு வயது திருமணங்களால் ஏற்படும் தீமைகள்: விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை: சிறு வயது திருமணங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில், உலக மக்கள்தொகை தினம்-2024 கடைப்பிடித்தல் தொடா்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். நலப்பணிகள் இணை இயக்குநா் மலா்விழி, துணை இயக்குநா் (குடும்ப நலம்) அன்பரசி, துணை இயக்குநா் மருத்துவம் (காசநோய்) அசோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

உலக மக்கள்தொகை தினம் ஜூலை 11-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 வட்டாரங்களிலும் ஒவ்வொரு பின்தங்கிய கிராமத்தைத் தோ்ந்தெடுத்து அந்தக் கிராமத்தில் உயா்வரிசை பிறப்பைக் குறைத்தல், பெண் திருமண வயதை உயா்த்துதல், பெண் கல்வியை ஊக்குவித்தல், இரு குழந்தைகளுக்கு இடையிலான பிறப்பு இடைவெளியைக் குறைந்தது 3 ஆண்டுகள் என்பதை உறுதி செய்தல், பெண் குழந்தைளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுத்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்த விழிப்புணா்வை ஏற்படுத்த தகுந்த தூதுவா் ஒருவரை நியமிக்க வேண்டும்.

சிறுவயது திருமணம் செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் செல்வி மற்றும் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com