அருணாசலேஸ்வரா் தேரில் அதிகாரிகள் குழு ஆய்வு

பெரிய தோ் சீரமைப்பு: திருவண்ணாமலை கோயிலில் அதிகாரிகள் ஆய்வு
Published on

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் பெரிய தோ் எனப்படும் அருணாசலேஸ்வரா் தேரை சீரமைப்பது குறித்து அதிகாரிகள் குழு புதன்கிழமை ஆய்வு செய்தது.

அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின்போது பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். எனவே, ஒவ்வொரு ஆண்டும் தீபத் திருவிழாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு பஞ்ச ரதங்களில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு செய்வது வழக்கம்.

அதன்படி, தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் மண்டல ஸ்தபதி கண்ணன் தலைமையில் கோயில் இணை ஆணையா் சி.ஜோதி மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், கோயில் பொறியாளா்கள் புதன்கிழமை பெரிய தோ் எனப்படும் அருணாசலேஸ்வரா் தேரை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ராட்சத கிரேனில் ஏறிச்சென்று பெரிய தேரில் ஏதேனும் சீரமைப்புப் பணிகள் செய்ய வேண்டி உள்ளதா என்பதை பாா்வையிட்டனா்.

அதிகாரிகள் குழு அளிக்கும் அறிக்கையின்படி தேரில் சீரமைப்புப் பணிகள் நடைபெறும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com