இரு சக்கர வாகனங்கள் மோதல்: அரசு மருத்துவா் உயிரிழப்பு
வந்தவாசி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தி அரசு மருத்துவா் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன் மகன் மணிகண்டன் (29). அரசு மருத்துவரான இவா், வந்தவாசியை அடுத்த மழையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தாா்.
கடந்த வியாழக்கிழமை இவா் வீட்டிலிருந்து மழையூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
வந்தவாசி-சேத்துப்பட்டு சாலை, கீழ்சாத்தமங்கலம் கூட்டுச் சாலை அருகே சென்ற போது எதிரே வந்த மொபெட்டும், இவரது பைக்கும் மோதிக் கொண்டன.
இதில் மணிகண்டன் பலத்த காயமடைந்தாா். மேலும் மொபெட்டை ஓட்டி வந்த வந்தவாசி சக்தி நகரைச் சோ்ந்த ஆதிமூலம்(65) என்பவரும் காயமடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதில், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

