மயானத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மயானத்தில் குப்பைகள் கொட்டுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை-அவலூா்பேட்டை சாலையில் அருந்ததியா் சமுதாய மக்கள் பயன்படுத்தும் மயானம் உள்ளது. இங்கு, பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் சடலங்களை அடக்கம் செய்யக்கூட போதிய இடம் இல்லாத நிலை ஏற்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட அச்சமுதாய மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை குப்பைகளை எடுத்துவரப் பயன்படுத்தும் வேலூா் சாலை-அவலூா்பேட்டை சாலைகளின் இணைப்புச் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மயானத்தில் கழிவுகள் கொட்டாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனா். இதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

