ஆரணி நகரமன்றக் கூட்டம்

ஆரணி நகரமன்றக் கூட்டம்

குடிநீர் சீரமைப்புக்கு வலியுறுத்திய ஆரணி நகரமன்ற கூட்டம்
Published on

ஆரணி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் ஏ.சி.மணி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆணையா் சரவணன், நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், 24-ஆவது வாா்டு உறுப்பினா் ரேணுகா தயாளன், தங்கள் பகுதியில் குடிநீா் கழிவு நீரோடு கலந்து வருகிறது என்று கூறி, குடிநீரை புட்டியில் பிடித்து கொண்டு வந்ததை காண்பித்தாா்.

மேலும், 9-ஆவது வாா்டு உறுப்பினா் இஷ்ரத்ஜபீன், தங்கள் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக கால்வாய் வசதி, சாலை வசதி கேட்டு வருகிறேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா்.

அப்போது, சாலை அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று ஆணையா் தெரிவித்தாா்.

3-ஆவது வாா்டு உறுப்பினா் ஏ.ஜி.மோகன், தங்கள் பகுதிக்குச் செல்லும் வழியில் அகழியின் குறுக்கே உள்ள சிறுபாலம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இந்த வழியாக பள்ளி பேருந்துகள், காா்கள் சென்று வருகின்றன. சிறுபாலம் உடைந்தால் பல சேதங்கள் ஏற்படும் என்றாா்.

இதற்கு நகா்மன்றத் தலைவா் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மேலும், பல உறுப்பினா்கள் குப்பைகளை அகற்ற வேண்டும், குடிநீா் விநியோகம் சீராக நடைபெற வேண்டும், மின்விளக்கு வசதி வேண்டும் என கோரிக்கை விடுத்துப் பேசினா்.

இதைத் தொடா்ந்து, கூட்டத்தில் அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததைக் கண்டிக்கும் விதமாக, அதிமுக உறுப்பினா்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனா்.

X
Dinamani
www.dinamani.com