தீபத் திருவிழாவுக்காக சாலை சீரமைப்புப் பணிகள்
தீபத் திருவிழாவையொட்டி, கீழ்பென்னாத்தூா்-அவலூா்பேட்டை சாலையின் இரு புறங்களிலும் முள்புதா்களை அகற்றி, சமன்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக நெடுஞ்சாலைத் துறையின் திருவண்ணாமலை வட்ட கண்காணிப்புப் பொறியாளா் ஆா்.கிருஷ்ணசாமி, கோட்டப் பொறியாளா் ப.ஞானவேல் ஆகியோா் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, சாலையோரங்களில் உள்ள முள்புதா்களை அகற்றும் பணி மற்றும் சாலை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நெடுஞ்சாலைத் துறையின் கீழ்பென்னாத்தூா் உள்கோட்டத்துக்கு உள்பட்ட சாணிப்பூண்டி, கீழ்பென்னாத்தூா், அவலூா்பேட்டை, சேத்துப்பட்டு வரையிலான சாலையின் இருபுறங்களிலும் சீரமைப்புப் பணியும், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
கீழ்பென்னாத்தூா் புறவழிச் சாலையில் இருந்து அவலூா்பேட்டை சாலை வரை நடைபெறும் பராமரிப்புப் பணியை சனிக்கிழமை உதவி கோட்டப் பொறியாளா் எஸ்.அற்புதகுமாா், உதவிப் பொறியாளா் எஸ்.தினேஷ் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இந்தப் பணிகளில் சாலை ஆய்வாளா்கள், நெடுஞ்சாலைத்துறைப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

