விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கல்குவாரி லாரி.
விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கல்குவாரி லாரி.

கல்குவாரி லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம்

செய்யாறு அருகே கல்குவாரி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநா் காயமடைந்தாா்.
Published on

செய்யாறு அருகே கல்குவாரி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநா் காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து, குவாரி லாரிகளை கிராம மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பெரியவேளியநல்லூா் கிராமத்தில் தனியாா் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

இந்தக் குவாரியில் இருந்து புளியரம்பாக்கம் கிராமம் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றி வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர விவசாய நிலத்தில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுநா் சுகுமாா் காயமடைந்தாா். இவரை கிராம மக்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம்

விதி முறைகளை மீறி அதிகளவில் சுமைகளை ஏற்றிச் செல்வதால்தான் விபத்துகள் நேரிடுகின்றன. மேலும் குடியிருப்பு பகுதியில் லாரி கவிழ்ந்து இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். அதனால், அனுமதிக்கப்பட்ட அளவு மட்டும் சுமை ஏற்றி, மிதமான வேகத்தில் லாரிகளை இயக்க வேண்டும்

எனக் கூறி கிராம மக்கள் அந்த வழியாக வந்த லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கல்குவாரி மேற்பாா்வையாளா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, சரக்கு லாரிகளை கவனமாக இயக்க வேண்டும், இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம மக்கள் தெரிவித்தனா்.

அதற்கு உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து கிராம மக்கள் சிறைப்பிடித்த லாரிகளை விடுவித்தனா். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com