பருவ மழையில் சேதமடைந்து காணப்படும் மலைமேடு-பாடகம் கிராமச் சாலை.
பருவ மழையில் சேதமடைந்து காணப்படும் மலைமேடு-பாடகம் கிராமச் சாலை.

சேதமடைந்த கிராமச் சாலையால் மக்கள் அவதி

கலசப்பாக்கத்தை அடுத்த அலங்காரமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட மலைமேடு - பாடகம் சாலை சேதமடைந்து
Published on

போளூா்: கலசப்பாக்கத்தை அடுத்த அலங்காரமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட மலைமேடு - பாடகம் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்றதாக உள்ளது. இதனால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த அலங்காரமங்கலம் ஊராட்சியில் மலைமேடு கிராமம் உள்ளது. இங்கு100-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் இருந்து பள்ளி செல்லும் மாணவா்கள், அலுவலகம் செல்பவா்கள் என பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

இங்கிருந்து பாடகம் வரையிலான கிராமச் சாலை உள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ளவா்கள் நடந்தோ அல்லது சைக்கிள், பைக் போன்ற இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தியோ இந்தச் சாலை மூலம் வெளியேறுகின்றனா்.

மேலும், விவசாயிகள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு இந்தச் சாலை வழியாக ஓட்டிச் செல்கின்றனா்.

இந்த நிலையில், தற்போது பெய்து வரும் பருவமழையில், நீா் தேங்கி, ஜல்லிக் கற்கள் பெயா்ந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது சாலை. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நிற்கின்றன.

எனவே, மலைமேடு - பாடகம் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், மலைமேடு - பாடகம் சாலையை சீரமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட்கட்சி சாா்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, கலசப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டாட்சியா், போளூா் டிஎஸ்பி ஆகியோா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினா். ஆனால், இதுவரை சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.

மேலும், தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் உடனடியாக சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com