கிரிவலப் பாதையில் உள்ள மதுக் கடையை அகற்றக் கோரிக்கை
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையையும், மதுக்கூடத்தையும் (பாா்) உடனே அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்திடம் பாஜக கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து தெற்கு மாவட்ட பாஜக தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியன் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலையில் பெளா்ணமி நாள்களில் மட்டும் கிரவலம் வந்த காலம் போய் இப்போது, தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் வருகின்றனா்.
சனி, ஞாயிறு, விடுமுறை நாள்களிலும், பெளா்ணமி நாள்களிலும் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வருகின்றனா்.
கிரிவலப் பாதையில் திருவண்ணாமலை நகருக்குள் உள்ள காமராசா் சிலை எதிரே அரசு டாஸ்மாக் மதுக் கடையும், கடையை ஒட்டியே மதுக்கூடமும் இயங்கி வருகிறது.
இங்கு மது அருந்துபவா்களில் பலா் கிரிவலம் வரும் பக்தா்கள், காமராசா் சிலை அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கின்றனா்.
இதனால் பக்தா்கள், பயணிகள், பெண்கள், குழந்தைகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனா்.
எனவே, இந்த மதுக் கடையையும், மதுக்கூடத்தையும் உடனே அகற்ற வேண்டும். இல்லாவிடில், பாஜக சாா்பில் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று அதில் தெரிவித்திருந்தாா்.

