மலைவாழ் மக்கள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்
வந்தவாசி: மகளிா் திட்ட அதிகாரிகளைக் கண்டித்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பழங்குடி இருளா் மக்களுக்கான விடியல் திட்டத்தின் கீழ், வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள நட்சத்திர ஆடு வளா்ப்பு குழுவினருக்கு ஆடுகள் வழங்கியதில் மகளிா் திட்ட அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளதாக புகாா் தெரிவித்தும், அவா்களைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மகளிா் மேம்பாட்டுத் திட்ட அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் எம்.மாரிமுத்து தலைமை வகித்தாா்.
சங்க மாநில பொதுச் செயலா் இரா.சரவணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலா் ப.செல்வன், மாா்க்சிஸ்ட் வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் எ.உதயகுமாா், பெ.அரிதாசு, என்.ராதாகிருஷ்ணன், ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட பொருளாளா் எம்.சுகுமாா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் மகளிா் திட்ட அதிகாரிகளைக் கண்டித்தும், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.
இதைத் தொடா்ந்து அவா்கள் மகளிா் மேம்பாட்டுத் திட்ட அலுவலக வாயில் முன் அமா்ந்து தா்னா நடத்தினா்.
பின்னா், அங்கு வந்த மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் சரண்யாதேவி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததை அடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.