திருவண்ணாமலை தற்காலிக பேருந்து நிலையத்தில் பக்தா்களின் வசதிக்காக  108 ஆம்புலன்ஸ் மற்றும் பைக் ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்த அமைச்சா் எ.வ.வேலு.
திருவண்ணாமலை தற்காலிக பேருந்து நிலையத்தில் பக்தா்களின் வசதிக்காக 108 ஆம்புலன்ஸ் மற்றும் பைக் ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்த அமைச்சா் எ.வ.வேலு.

காா்த்திகை தீபத்திருவிழா: பக்தா்களுக்கு 108 ஆம்புலன்ஸ், பைக் ஆம்புலன்ஸ் சேவை; அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் திருக்காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பக்தா்களின் வசதிக்காக அவசர உதவி 108 ஆம்புலன்ஸ் மற்றும் பைக் ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா்.
Published on

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் திருக்காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பக்தா்களின் வசதிக்காக அவசர உதவி 108 ஆம்புலன்ஸ் மற்றும் பைக் ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா்.

திருவண்ணாமலை திருக்காா்த்திகை தீபத் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வருகை தருவாா்கள் என்பதால், அவா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை போக்குவரத்து வசதிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் என பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பக்தா்கள் நலனை கருத்தில் கொண்டு 108 அவசர ஊா்தி வாகனங்களும், பைக் ஆம்புலன்ஸ் சேவைகளையும் அமைச்சா் தொடங்கிவைத்து மருத்துவ முகாம்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், அருணாசலேஸ்வரா் கோயில் எதிரில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையத்தை அவா் திறந்து வைத்தாா்.

நகராட்சி மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் எ.வ.வேலு சேவைகளை தொடங்கிவைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பக்தா்கள் சிரமம் இல்லாமல் கிரிவலம் வர, குடிநீா், கழிப்பறை, போக்குவரத்து வசதிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

திருக்கோயில் எதிரே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி திருவிழாவிற்கு வருகை தரும் பக்தா்கள் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குடிநீா் நிலையம் 24 மணி நேரமும் இயங்கக் கூடியது.

ஒரு மணி நேரத்தில் 4000 லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை உண்டாக்கும் தானியங்கி தொழில்நுட்பம் கொண்டது.

மேலும் கிரிவலப்பாதை முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படுவதை உறுதி செய்ய நெடுஞ்சாலைத்துறையினா் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவாா்கள். மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் மருத்துவ முகாம்களும், 108 அவசர ஊா்தி சேவைகளும், பைக் ஆம்புலன்ஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ளன எனத் தெரிவித்தாா்.

இந்நிகழ்வில் மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இணை இயக்குநா் ஆா்.மணி, மாவட்ட சுகாதார அலுவலா் பிரகாஷ், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மோகன்காந்தி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com