அரசு ஊழியா் சங்கத்தினா் மறியல் போராட்டம்: 264 போ் கைது

Published on

செய்யாற்றில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணியாகச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்டதாக 129 பெண்கள் உள்பட 264 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செய்யாற்றில், திருவண்ணாமலை மாவட்ட அளவிலான அரசு ஊழியா் சங்கத்தினா் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் நியமனங்களை 25 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைத்ததை தவிா்த்து மீண்டும் முந்தைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும், அரசு ஊழியா்களின் பணிச் சுமையை குறைக்க வேண்டும்

என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செய்யாறு வட்டாட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பரிதிமாற் கலைஞா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பிரபு, மாநிலத் தலைவா் பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 300 -க்கும் மேற்பட்டோா் பேரணியாகச் சென்றனா்.

சாலை மறியல்

பின்னா் செய்யாறு அண்ணா சிலை அருகே சாலை அருகே திடீரென தரையில் அமா்ந்து மறியல் போராட்டம் நடத்தினா்.

அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த செய்யாறு போலீஸாா் 129 பெண்கள், ஆண்கள் 135 போ் என மொத்தம் 264 பேரை கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com