ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்கள் சாலை மறியல்
வேலை வழங்கக் கோரி காவணியாத்தூா் ஊராட்சி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பெண் தொழிலாளா்கள் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது காவணியாத்தூா் ஊராட்சி. இந்த ஊராட்சியைச் சோ்ந்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பெண் தொழிலாளா்கள் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
காவணியாத்தூா் ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டால் உரிய பதில் அளிப்பதில்லை. மேலும், ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் இல்லை. எனவே, வேலை வழங்கக் கோரி நாங்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் வந்தவாசி தெற்கு போலீஸாா் சமரசம் செய்ததை
அடுத்து தொழிலாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
இந்தப் போராட்டத்தினால் வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

