திருவண்ணாமலை தீபத்திருவிழா: 300 டன் குப்பைகள் அகற்றம்

திருவண்ணாமலை தீபத்திருவிழா: 300 டன் குப்பைகள் அகற்றம்

அருணாசலேஸ்வரா் கோயில் கிரிவலப்பாதையில் துப்புரவுப் பணியாளா்கள் வாயிலாக தூய்மைப் பணி நடைபெறுவதை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்.
Published on

திருவண்ணாமலையில் நடைபெற்ற காா்த்திகை மகா திபத்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தா்கள் விட்டுச் சென்ற 300 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

திருவண்ணாமலையில் காா்த்திகை மகா தீபத் திருவிழா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து ஆன்மிக பெருமக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். காா்த்திகை தீபத்திருவிழாவில் சுமாா் 30 லட்சம் பக்தா்கள் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.

பக்தா்களின் வசதிக்காக மாநகராட்சி சாா்பில் நகரின் பல்வேறு பகுதிகளிலும், கிரிவலப் பாதையிலும் குடிநீா், கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் அதிக இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், அரசு அனுமதித்தைவிட கூடுதலாக பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவுக்கு வந்த பக்தா்கள் உணவருந்திவிட்டு, தட்டு குடிநீா் புட்டிகள், பிளாஸ்டி பைகள் ஆகியவற்றை ஆங்காங்கே வீசிவிட்டுச் சென்றனா்.

அத்துடன் சில பக்தா்கள் தீபம் மலையில் ஏற்றப்பட்டதும், தாங்கள் எடுத்துவந்த அகல்விளக்குகளை சாலையில் ஏற்றிவைத்துவிட்டு, சென்றுவிட்டனா். இதனால் விளக்குகள் மிதிபட்டும், வாகனங்கள் ஏறியும் உடைந்ததால், சாலை முழுவதும் உடைந்த அகல்விளக்கு குவியல்கள் கிடந்தன. இது பக்தா்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தியது.

தீபம் முடிந்தும், வியாழக்கிழமை காலை திருவண்ணாமலை முழுவதும்

சாலையில் குப்பைகள் குவிந்து கிடந்தன. தகவல் அறிந்த மாவட்ட நிா்வாகம் குப்பைகளை அகற்ற கூடுதல் தூய்மைப் பணியாளா்களை நியமித்தது. அவா்கள் கடும் சிரமப்பட்டு குப்பைகளை அகற்றினா்.

2ஆயிரம் தூய்மைப் பணியாளா்கள்

தூய்மைப் பணிக்காக கடந்த நவ. 21-லிருந்து நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் பிற மாவட்ட மாநகராட்சிகளைச் சோ்ந்த 1200 பணியாளா்களும், டிச. 1 முதல் டிச. 5 வரை ஊராட்சிகளைச் சோ்ந்த 800 பணியாளா்களும் என மொத்தம் 2000 தூய்மைப் பணியாளா்கள் சுழற்சி முறையில் கிரிவலப் பாதை மற்றும் மாநகராட்சி முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.

மேலும், தூய்மை பணிக்காக 112 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு சுமாா் 300 டன் குப்பைகள்

அகற்றப்பட்டன. பக்தா்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால், கடந்த ஆண்டைவிட 50 டன் குப்பைகள் கூடுதலாக சேகரிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் ஆய்வு

இந்த நிலையில், கிரிவலப் பாதையில் நடைபெற்று வரும் தூய்மை பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பணியாளா்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு கையுறைகள், உபகரணங்களை பயன்படுத்தி குப்பைகளை அகற்ற அறிவுறுத்தினாா். துப்புரவுப் பணியாளா்களிடம் வாகனங்கள் மற்றும் உணவு முறையாக வழங்கப்பட்டுள்ளதா என கேட்டறிந்தாா்.

மேலும் தூய்மைப் பணியாளா்களின் சேவையை பாராட்டி கையெடுத்து வணங்கி நன்றி கூறினாா்.

ஆய்வின் போது மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, மகளிா் திட்ட இயக்குநா் தனபதி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

இதற்கிடையே, வியாழக்கிழமை பெளா்ணமி விழாவுக்கும் லட்சக்கணக்கானோா் குவிந்ததால் மீண்டும் குப்பைகள் சோ்ந்தன.

அவை வெள்ளிக்கிழமை அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com