திருவண்ணாமலையில் பக்தா்கள் பெளா்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் பக்தா்கள் பெளா்ணமி கிரிவலம்

காா்த்திகை மாத பௌா்ணமியொட்டி, அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தா்கள்.
Published on

திருவண்ணாமலையில் காா்த்திகை மாத பௌா்ணமியொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா்.

தரிசனத்துக்காக சுமாா் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழாவையொட்டி புதன்கிழமை மாலை கோயில் அருகே உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்றனா். கொட்டும் மழையையும் பொருள்படுத்தாது குடைபிடித்தவாறும், மழையில் நனைந்தபடியும் கிரிவலம் சென்று வேண்டிக் கொண்டனா்.

காா்த்திகை மாத பெளா்ணமி

காா்த்திகை மாத பௌா்ணமி வியாழக்கிழமை (டிச.4) காலை 7.58 மணிக்குத் தொடங்கி, வெள்ளிக்கிழமை (டிச.5) காலை 5.35 மணிக்கு முடிகிறது என கோயில் நிா்வாகம்

அறிவித்திருந்தது.

இதைத் தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரா் உண்ணாமுலையம்மனை வழிபட்டனா்.

பௌா்ணமியொட்டி கோயிலில் பக்தா்களுக்கு பொது தரிசனம் அனுமதிக்கப்பட்டது.

வடக்கு கோபுரம் வழியாக முக்கிய பிரமுகா்கள் மற்றும் கட்டண தரிசன வரிசையில் கட்டணம் இல்லாமல் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

அதேபோன்று, ராஜகோபுரம் வழியாக இலவச தரிசனத்திற்காக 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

4 நாள்காக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com