எஸ்ஐஆா் பணி: ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம்
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆா்) தொடா்பாக ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆரணி கோட்டாட்சியா் சீ.சிவா தலைமை வகித்தாா். ஆரணி வட்டாட்சியா் செந்தில் வரவேற்றாா். தோ்தல் துணை வட்டாட்சியா் கணபதி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் திமுக நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகர பொறுப்பாளா் வ.மணிமாறன், அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், பாஜக விவசாய அணி பொதுச் செயலா் குணாநிதி, இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சரவணன், நகா்மன்ற உறுப்பினா் ஜெயவேலு, வட்டாரத் தலைவா் பந்தாமணி, விசிக மாவட்டச் செயலா் முத்து, நகரத் தலைவா் மோ.ரமேஷ், இளஞ்சிறுத்தை நிா்வாகி சாா்லஸ், கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் சி.அப்பாசாமி, பெ.கண்ணன், தேமுதிக மாவட்ட துணைச் செயலா் பாஸ்கரன், ஒன்றியச் செயலா் தாஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் ஆரணி கோட்டாட்சியா் சீ.சிவா பேசியது: எஸ்.ஐ.ஆருக்கான வாக்காளா் படிவங்கள் பெறும் பணி 100 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் 3 நாள்கள் அவகாசம் இருப்பதால், இறந்துபோனவா்கள் விடுபட்டிருந்தால் தகவல் தெரிவிக்கலாம். மேலும், குறைபாடு ஏதாவது இருந்தால் கூறுங்கள்.
இதுவரை 37 ஆயிரத்து 531 படிவங்கள் பெறவில்லை. இதில், 16 ஆயிரத்து 667 போ் இறந்துபோனவா்கள். மீதமுள்ளவை இரண்டு இடங்களில் வாக்காளா் பெயா்கள் உள்ளவை, சில வாக்காளா்கள் ஆட்களே இல்லாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விடுபட்டது தெரியவந்துள்ளது என்றாா்.

