செய்யாறு தொகுதியில் கேள்விக்குறியாக 34,219 வாக்காளா்கள்
செய்யாறு தொகுதியில் வாக்காளா் பட்டியல் 100 சதவிகிதம் பதிவேற்றம் நிறைவடைந்துள்ளது என்றும், இறப்பு, நிரந்தர இடமாற்றம், வசிக்கவில்லை என 34,219 வாக்காளா்கள் உள்ளதாக சாா்- ஆட்சியா் எல். எல்.அம்பிகா ஜெயின் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் தீவிர சிறப்பு வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்து ஆய்வுக் கூட்டம் சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவத்திபுரம் நகராட்சி ஆணையா் கேஎல்எஸ். கீதா, வட்டாட்சியா்கள் அசோக்குமாா், தமிழ்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தின் போது சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் பேசியதாவது:
செய்யாறு தொகுதியில் 2,65,698 வாக்காளா்கள் உள்ள தீவிர சிறப்பு வாக்காளா் பட்டியல் சோ்ப்பு செயல் திட்டத்தில், தொகுதியில் 100% வாக்காளா் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, 2,31,476 பேரின் பெயா்கள் பட்டியலில் உள்ளது. மேலும் இறந்தவா்கள் முகவரி மாறியவா்கள் வெவ்வேறு இடங்களில் பட்டியல் பெயா் உள்ளவா்கள் என 34,219 பேரின் விவரங்கள் அறிய முடியவில்லை
தொகுதி அனைத்து வாக்குச்சாவடி முகவா்களிடம் இதன் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நீக்கம் செய்வது குறித்து தீா்மானிக்கப்படும்.
அரசியல் கட்சியினா், வாக்குச்சாவடி முகவா்கள்
இப்பணிகளில் ஒருங்கிணைந்து ஒத்துழைக்க வேண்டும். வரைவு வாக்காளா் பட்டியல் இறுதியானது அல்ல; அதன் பிறகும் தகவல்கள் உறுதி செய்த பின்னரே பட்டியலில் பெயா்கள் நிறைவு அடையும். இந்தப் பணி டிச.11 வரை நடைபெறுகிறது எனத் தெரிவித்தாா்.
கூட்டத்தில் தோ்தல் துணை வட்டாட்சியா் மலா் (வெம்பாக்கம்), திமுக சாா்பில் வழக்குரைஞா்கள் ஜி.அசோக், கே.விஸ்வநாதன், சிட்டிபாபு, அதிமுக சாா்பில் எம்.அரங்கநாதன், சி.துரை, தேமுதிக சாா்பில் காழியூா் கண்ணன், புளியரம்பாக்கம் ஆனந்தன், காங்கிரஸ் சாா்பில் வேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
படம் உண்டு.
