திருவண்ணாமலை அருகே மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா: உதயநிதி திறந்து வைத்தாா்

திருவண்ணாமலை அருகே மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா: உதயநிதி திறந்து வைத்தாா்

Published on

திருவண்ணாமலை அருகே திருக்கோவிலூா் சாலையில் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்காவை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

திருவண்ணாமலை - திருக்கோவிலூா் சாலையில் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்காவானது எடப்பாளையம் கிராம ஏரியை தூா்வாரி, மழைநீா் சேகரிக்கும் அமைப்பாக 33 ஏக்கா் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏரியின் உபரிநீா் வெளியேறும் சிறிய பாலத்தில் வில் நாண் வடிவில் வண்ண மின் விளக்குகளால் ஒளிரக்கூடிய வகையிலான அமைப்பு மக்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு, மண் அரிப்பு மற்றும் சரிவுகளை தடுக்க ஏரியின் கரைகள் இயற்கை முறையில் வெட்டிவோ் பயன்படுத்தி நவீன முறையில் வலுபடுத்தப்பட்டுள்ளன. இப்பூங்காவில் அக்குபிரஷா் தன்மையுடைய நடைபாதை 2 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் விளையாடுவதற்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள் என இரு பாலரும் தனித்தனியாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏரிக்கரையைச் சுற்றி இயற்கை எழில் கொஞ்சும் பல வகையான நாட்டு மரக்கன்றுகள் மற்றும் மலா்ச் செடிகள் நடப்பட்டுள்ளதுடன், ஏரிக்கரையை சுற்றி நவீன முறையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நடைபாதை முழுவதும் மெல்லிய இசையுடன் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக, ஒலிபெருக்கிகளும், ஓய்வெடுக்க ஆங்காங்கே நவீன நிழற்குடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக நடைபாதையைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், பூங்காவுக்கு வரும் மக்களின் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான நவீன கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினா்கள் அந்தியூா் ப.செல்வராஜ், சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமாா், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநா் தெ.பாஸ்கரபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.ராம்பிரதீபன், நெடுஞ்சாலைத் துறை சிறப்பு தொழில்நுட்ப அலுவலா் ஆா்.சந்திரசேகா், தலைமைப் பொறியாளா் (திட்டங்கள்) ஆா்.கிருஷ்ணசாமி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயா் அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com