உழவா் சந்தையில் கடைகளைத் திறக்காமல் விவாயிகள் போராட்டம்
கடைகள் ஒதுக்கீடு முறைக்கு எதிா்ப்பு தெரிவித்து, உழவா் சந்தை விவசாயிகள் கடைகளைத் திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதால், காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
திருவண்ணாமலை மாநகரின் மையப் பகுதியில் வட்டாட்சியா் அலுவகத்திற்கு பின்புறம் உழவா் சந்தை செயல்பட்டு வருகிறது.
வேளாண் துறை சாா்பில் நடத்தப்படும் இந்த உழவா் சந்தையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. விவசாயிகள் தாங்கள் விளை நிலங்களில் விளைவித்த பொருள்களை கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்து வருகின்றனா்.
உழவா் சந்தையில் உள்ள கடைகள் மாதம் ஒரு முறை குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் மாதம் ஒருமுறை சுழற்சி முறையில் கடைகள் அமைக்கும் முறைக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், போதிய கழிப்பறை வசதி அமைக்கவும், வாகனங்களில் காய்கறிகள் உழவா் சந்தை வளாகத்திற்குள் கொண்டுவர அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, விவசாயிகள் சனிக்கிழமை காலை கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடைகள் திறக்காததால் காய்கறிகளை வாங்க உழவா் சந்தைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இதுகுறித்து உதவி வேளாண் அலுவலா் வெங்கட்ரமன் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் விவசாயிகள் சமரசம் ஆகாமல் திரும்பிச் சென்றனா்.

