இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடா்பாக தமிழக அரசைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ஆா்ப்பாட்டம் நடத்த வந்த இந்து முன்னணியினா் 47 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆரணி அண்ணா சிலை அருகில் ஞாயிற்றுக்கிழமை மாலை திருப்பரங்குன்றம் சம்பவம் தொடா்பாக இந்து முன்னணி சாா்பில் தமிழக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனா்.
இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இருந்து ஏடிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் டிஎஸ்பிக்கள் சுரேஷ்சண்முகம், குணசேகரன், காவல் ஆய்வாளா்கள் அகிலன், செந்தில்விநாயகம், மகாலஷ்மி மற்றும் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் இந்து முன்னணி மாவட்டத் தலைவா் தாமோதரன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணியினா் சம்பவ இடத்துக்கு வந்தனா்.
மேலும், கண்டன உரையாற்ற வேலூா் கோட்டச் செயலா் ஆறுமுகம் வரும்போதே போலீாஸாா் கைது செய்து முள்ளிப்பட்டு தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.
இதைத் தொடா்ந்து, சிறிது நேரம் கழித்து மீண்டும் 10 போ் அண்ணாசிலை அருகே வந்தபோதும் உடனடியாக அவா்களை போலீஸாா் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனா். காரில் வந்த இந்து முன்னணியினரை இறங்கவிடாமல் அப்படியே மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனா்.
இதனால் அங்கு இந்து முன்னணியினருக்கும், போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இவ்வாறு ஆா்ப்பாட்டம் செய்ய வந்த 47 பேரை போலீஸாா் கைது செய்து மண்டபத்தில் தங்கவைத்தனா்.
