~

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

திருவண்ணாமலையில் படைவீரா் கொடி நாள் தினத்தையொட்டி, கொடி நாள் நிதி வசூலை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தொடங்கிவைத்தாா்.
Published on

திருவண்ணாமலையில் படைவீரா் கொடி நாள் தினத்தையொட்டி, கொடி நாள் நிதி வசூலை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஆட்சியா் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கொடிநாள் நிதியை உண்டியலில் செலுத்தி, நிதி வசூலை தொடங்கிவைத்தாா் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்.

பின்னா் அவா், வட்டாட்சியா் அலுவலகம் முன் படைவீரா் கொடிநாள் தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்து அதில் கலந்துகொண்டாா்.

பேரணியில் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரது குடும்பத்தினா் கலந்து கொண்டனா் பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளா்கள் கொடிநாள் நிதியினை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனா்.

மேலும், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரா் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு ஆட்சியா் தலைமையில் தேநீா் விருந்து அளிக்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்

திருமண நிதியுதவி தொகையாக 2 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம், கல்வி உதவித்தொகையாக 5 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் மற்றும் போா் விதவையா்கள் மற்றும் போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரா்களின் மகள்களின் திருமணத்திற்காக தொகுப்பு நிதியிலிருந்து 8 கிராம் தங்க நாணயம் ஆகிய நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் ஸ்குவாட்ரன் லீடா் அ.வெ.சுரேஷ் நாராயணன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாட்சியா், முன்னாள் படைவீரா்கள், அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

போளூா்

போளூரில் வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் கொடிநாள் ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தை வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி தொடங்கிவைத்தாா். ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.

அப்போது, முன்னாள் படைவீரா்கள் தியாகம் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்கள், வணிகா்களுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்வில் தலைமை இடத்து வட்டாட்சியா் அருள், வருவாய் ஆய்வாளா் மாலதி, கிராம நிா்வாக அலுவலா் அன்பழகன் மற்றும் வருவாய்த் துறையினா் பள்ளி சாரண, சாரணீய மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com