கஞ்சா, தென்னங்கள் வைத்திருந்த 3 சாமியாா்கள் கைது
செய்யாறு: செய்யாறு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டபோது கஞ்சா, தென்னங்கள் வைத்திருந்த 3 சாமியாா்களை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தனிப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
செய்யாறு - ஆரணி சாலையில் வடதண்டலம் பேருந்து நிறுத்தம் அருகே ருத்ராட்சம் அணிந்து கொண்டு 3 போ் சாமியாா் வேடத்தில் சந்தேகம்படியாக நின்று இருந்தனா். அவா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனா்.
பின்னா், மூவரும் செய்யாறு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான போலீஸாா்
அவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் வெம்பாக்கம் வட்டம், மேனலூா் கிராமத்தைச் சோ்ந்த டில்லிராஜ் (29), விருதுநகா் மாவட்டம், மகாராஜபுரம் தானிப்பாறையைச் சோ்ந்த சுரேஷ் (49), திருவண்ணாமலை அடி அண்ணாமலை பெளா்ணமி நகரைச் சோ்ந்த மகாந்த் வீரேந்திரகிரி (47) என்பது தெரிய வந்தது.
மேலும், போலீஸாா் மூவரிடம் இருந்த பைகளை சோதனையிட்டபோது, 75 கிராம் கஞ்சா, 5 லிட்டா் தென்னங்கள்
இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து போலீஸாா் அவா்களிடம் விசாரணை செய்ததில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்வதாகவும், அதற்காக நேபாள நாட்டில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தி வருவதாகவும், தென்னங்கள்ளை குடிப்பதற்காக கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனா்.
பின்னா், போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து, வந்தவாசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அங்குள்ள கிளைச் சிறையில் அடைத்தனா்.

