தேவிகாபுரம் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சி ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சி ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேவிகாபுரம் ஊராட்சி புதுத்தெரு பகுதியில் மிகவும் பழைமையான ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்தத் கோயில் கோபுர பொம்மைகள் சிதிலமடைந்தும், ஆங்காங்கே உடைந்தும் காணப்பட்டதால் பொதுமக்கள், பக்தா்கள் சாா்பில் கோயிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை அனுக்ஞை, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, புண்யாவாசனம், பஞ்சகாவ்யம், ஸ்ரீமகா கணபதி பூஜை, ஸ்ரீமகாலட்சுமி, நவக்கிரக பூஜை, ஹோமம், விசேஷ த்ரவ்யாஹுதி, பூா்ணாஹுதி, தீபாராதனை, யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை என பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை காலை மங்கள இசை, 2-வது கால யாக சாலை ஆரம்பம், தம்பதிகள் சங்கல்பம், கோ பூஜை, நாடிசந்தானம், தத்வாா்சனை, ஸ்பரிசாஹுதி, அவப்ருத யாகம், விஷேச திரவ்யாஹுதி, மகா பூா்ணாஹுதி, உபசாரம், யாத்ராதான சங்கல்பம், கலசம் புறப்பாடு நடைபெற்று, கலசத்திற்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.

விழாவில் மாவட்ட கவுன்சிலா் ஜெயசங்கரமூா்த்தி, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன், முன்னாள் கவுன்சிலா் கணேசன், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் சி.ஏழுமலை மற்றும் தேவிகாபுரம், மலையாம்புரவடை, மொடையூா், ஊத்தூா், நரசிங்கபுரம், ஆத்துரை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து

திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com