விளையாட்டில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு
ஆரணி: மாநில அளவிலான ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்ற பெரணமல்லூரை அடுத்த மடம் அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா் தா்ஷன் மாவட்ட அளவில் கடந்த வாரம் கண்ணமங்கலம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்ட ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டாா். இதில் மாவட்டத்தில் இருந்து 4 பள்ளிகள் கலந்து கொண்டன.
போட்டியில் மாணவா் தா்ஷன் வெற்றி பெற்று மாநில அளவில் வருகிற ஜனவரி மாதம் மதுரையில் நடைபெறும் போட்டிக்குத் தகுதி பெற்றாா்.
இந்த நிலையில் மடம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) தட்சிணாமூா்த்தி மற்றும் சக ஆசிரியா்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவா் தா்ஷனை பாராட்டி சான்றிதழ் வழங்கினா்.
மேலும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா் மணிவண்ணனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

